இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

 

இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை: இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு, அந்நாட்டின் முன்னாள்; அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ராஜபக்சே பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார். இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் பொறுப்பில் ரணில் விக்ரமசிங்கே நீடிக்கும் நிலையிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத மஹிந்த ராஜபக்சே திடீர் பிரதமராக பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழர் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எத்தகைய செயல்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.