இலங்கையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுப்பு; மக்கள் பீதி!

 

இலங்கையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுப்பு; மக்கள் பீதி!

நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்

கொழும்பு: இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பதற்றம் தணியாத நிலையில், அங்கு மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

srilanka terrorist

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்புவின் வெள்ளவெத்தை பகுதியில் சவாய் திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்க செய்துள்ளனர்.

srilanka

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதல் நடந்து இன்றுடன் மூன்று நாட்களான போதும், இலங்கை மக்கள் அந்த நடுக்கத்தில் இருந்து வெளிவரவில்லை. இந்த சூழலில், வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, குண்டுகள் நிரப்பப்பட்ட சிறிய வேன், லாரி உள்ளிட்டவைகள் கொழும்பு நகருக்குள் நுழைந்திருப்பதாகவும், தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் ஐந்து மோட்டார் சைக்கிள்களும் நுழைந்திருப்பதாக புலனாய்வு பிரிவினர் தகவல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை: கோட்டைவிட்ட இலங்கை அரசு; முப்படை தளபதிகள் அதிரடி மாற்றம்?