இறப்பு சான்றிதழில் கொரோனா வைரஸை குறிப்பிடாதீங்கன்னு டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்…. மேற்கு வங்க அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு…

 

இறப்பு சான்றிதழில் கொரோனா வைரஸை குறிப்பிடாதீங்கன்னு டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்…. மேற்கு வங்க அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு…

கொரோனா வைரஸால் உயிர் இழந்த எந்தவொரு நபரின் இறப்பு சான்றிதழிலும் கொரோனா வைரஸை காரணமாக குறிப்பிடக் கூடாது என டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேற்க வங்க அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இது தொடர்பாக கூறியதாவது: மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் விரிவான அறிக்கையை வெளியிடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை பொருத்தவரை மேற்கு வங்க அரசு பொதுமக்களுடன் கண்ணாமுச்சி விளையாடுகிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

கொரோனா வைரஸால் இறந்தாலும் அந்த நபரின் இறப்பு சான்றிதழில் இறப்புக் காரணமாக கொரோனா வைரஸை குறிப்பிடக் கூடாது என அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் உண்மையை முன்வைக்க விரும்புகிறேன், முர்ஷிதாபாத் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், எந்தவொரு நபரும் கொரோனாவால் இறந்தாலும் இறப்பு சான்றிதழில் கொரோனா வைரஸை குறிப்பிடக்கூடாது என அங்குள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க அரசு மீது நாம் வைக்கும் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை இந்த சம்பவம் நிரூபணம் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளநிலையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இந்த குற்றச்சாட்டு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.