இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

 

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

இராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு  5 ஆயிரம் காவல்துறையினர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முத்துசெல்லாபுரம் செல்லும் சாலையில்  இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிப் பின்னர் தலித்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். காங்கிரசு கட்சியில் இணைந்து காமராசரின் ஆதரவு பெற்ற இமானுவேல் சேகரன்  மறவர் சமுதாயத்தினருக்கும், தலித் சமுதாயத்தினருக்குமிடையே ஏற்பட்ட  மோதலில்  கடந்த  1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி  கொல்லப்பட்டார்.

இதனால் ஆண்டுதோறும்  பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தாண்டு நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோருக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நினைவிடம் செல்லும் வழித்தடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அசம்பாவிதங்கள் எதுவும்  நடைபெறாதவாறு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கலவர தடுப்புப் பிரிவு போலீஸார், வஜ்ரா வாகனங்களும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உதவியுடன் 3 கி.மீ. சுற்றளவு தூரத்தை கண்காணிக்கும் ஆளில்லா உளவு விமானம் பறக்க விடப்பட்டு குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.