இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள், பட்ஜெட் குறித்து எதிர்ப்பார்ப்புகள் உள்ளிட்டவை இந்தவாரம் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சியட், எல் அண்டு டி உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் இந்த வாரம் வெளிவர உள்ளது. நிதிநிலை முடிவுகளை பொறுத்து நிறுவன பங்குகளின் ஏற்ற இறக்கம் இருக்கும். சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சில நிவாரணங்களை அளிக்கும்படி ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றம் ஏற்பட்டாலும் அது பங்குச் சந்தையில் எதிரொலிக்கும்.

ஏசியன் பெயிண்ட்ஸ்

கடந்த டிசம்பர் மாத விமான பயணிகள் குறித்த புள்ளிவிவரம் இந்த வாரம் வெளிவருகிறது. பிப்ரவரி 1ம்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்த எதிர்பார்ப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐரோப்பிய மத்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கை வரும் 23ம் தேதி வெளியிட உள்ளது. நாளை மறுநாள் (21ம்தேதி) அமெரிக்காவின் ரெட்புக் வெளிவர உள்ளது. 

விமான பயணிகள்

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.