“இந்த இசையரசிக்கு முன்னால் நான் வெறும் பிரதமர்!” –  எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த தினப் பதிவு

 

“இந்த இசையரசிக்கு முன்னால் நான் வெறும் பிரதமர்!” –  எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த தினப் பதிவு

‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ என்று தேசபக்தியில் மனமுருகி பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமியை அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்களால் மறந்து விட முடியுமா. நமது தேச தந்தை மகாத்மா காந்திக்கும் பிடித்த பாடல். ‘எம்.எஸ். அம்மா’ என்று உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களால் அன்பாக கொண்டாடப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த தினம் இன்று.
இவர் பாடுவதைக் கேட்ட கந்திஜி, ‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று எம்.எஸ்.சுப்புலட்சுமியை மனம் விட்டுப் பாராட்டினார். இந்திய வானொலியில் மகாத்மா காந்திஜியின் அஞ்சலிக்கு இன்றைக்கும் இந்தப் பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ஒலிக்கிறது. திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப் படும் வெங்கடேச சுப்ரபாதம் எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலில் ஒலிப்பது தான்!

m.s.amma

“இந்தியா இந்தத் தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கி உள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்” என எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒரு முறை கூறினார்.  எம். எஸ். சுப்புலட்சுமியின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மிக இளம் வயதிலேயே இசை கற்றுக் கொள்ளத் தொடங்கிய இவர், பத்தாவது வயதில் முதல் இசைப் பதிப்பை வெளியிட்டார். தனது 17-வது வயதில் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். பல மொழிகளில் பாடியுள்ள இவர், சிறந்த வீணைக் கலைஞ்ராகவும் திகழ்ந்தவர்.

குடும்பத்தார் அழைத்த பெயர் குஞ்சம்மாள். அவரது முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவு தான். சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1945-ல் இவர் நடித்து ’பக்த மீரா’ படம் மிகவும் புகழ் பெற்றது. விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் 1940 ஆம் ஆண்டு சுப்புலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் அவருக்குக் கிடைத்த ஊதியம் 50 ஆயிரம் ரூபாய். அதை மூலதனமாகக் கொண்டு தான் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப்பட்டது. பத்திரிகையின் அப்போதைய விலை இரண்டு அணா. 

m.s.amma

ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், அறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப் பட்ட தமிழிசை இயக்கத்திற்கு பக்க பலமாக நின்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இந்தியில் வெளிவந்த மீரா திரைப் படத்தைப் பார்த்த பிரதமர் நேரு “இந்த இசையரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்!” என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பாராட்டிப் புகழ்ந்தார். அந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ எனும் பாடல் இன்றைக்கும் மிகவும் பிரபலமானது. இவ்வளவு பிரபலம், புகழ், சம்பாத்தியம் இருந்து. சுப்புலட்சுமி சாதாரண மனுஷியாகவே வாழ்ந்தார். பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் அவருக்கு கிடைத்த செல்வத்தை எல்லாம் தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமிதான்.

m.s.amma

இதற்காகவே இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சேசே விருது வழங்கப் பட்டது. இவர் உலகின் பல நாடுகளுக்குப் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். 1966 அக்டோபரில் ஐ.நா. சபையில் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். 1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இயற்கை எய்தினார்.