இந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய டாப் 5 வழக்குகள்……

 

இந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய டாப் 5 வழக்குகள்……

இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது அதில் நாடே அதிகம் எதிர்பார்த்த அயோத்தி, ரபேல் உள்பட டாப் 5 வழக்குகளும் அடங்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கொடுத்தார். இந்த புகார் நீதித்துறையில் மட்டுமல்ல பொது மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை விசாரித்த சிறப்பு விசாரணை குழு பெண்ணின் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அதனை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் எப்போதும் நடுநிலையோடு செயல்படும் என்பதை இந்த வழக்கு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

ரபேல் விமானம்

இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின. மேலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என அனைத்து வழக்குகளையும் கடந்த ஆண்டு டிசம்பரில் தள்ளுடிபடி செய்தது. இந்த தீா்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறுசீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில் தீர்ப்பு வழங்கியது. மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வரும் என கடந்த 2010ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின் முடிவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும். அதேசமயம் நீதித்துறையை கண்காணிக்கும் கருவியாக  அதனை பயன்படுத்தக்கூடாது. நீதித்துறையின் சுதந்திரத்ரைத குறைத்து மதிப்பிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.  

ராம் ஜென்ம பூமி- பாபர் மசூதி

பல ஆண்டுகளாக சவ்வாக இழுத்து வந்த ராம் ஜென்ம- பாபர் மசூதி வழக்கில், கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ளலாம். முஸ்லிம்கள் மசூதி கட்டி கொள்ள 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சபரிமலை

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது இந்து மற்றும் அய்யப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கேரளாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெரும் போராட்டமே நடந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த நவம்பரில் சபரிமலை தொடர்பான 63 சீராய்வு மனுக்கள் மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அந்த சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தார்கள். அடுத்த மாதம் சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.