இந்திய விமானப் படை பாகிஸ்தான் இலக்குகள் எதையும் தாக்கவில்லை – பாகிஸ்தானிய நிருபர் தகவல்!

 

இந்திய விமானப் படை பாகிஸ்தான் இலக்குகள் எதையும் தாக்கவில்லை – பாகிஸ்தானிய நிருபர் தகவல்!

இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் இலக்குகளை எதையும் தாக்கவில்லை என நியூயார்க் டைம்சின் பாகிஸ்தான் நிருபர் சல்மான் மசூத் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்: இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் இலக்குகளை எதையும் தாக்கவில்லை என நியூயார்க் டைம்சின் பாகிஸ்தான் நிருபர் சல்மான் மசூத் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு நாடே கொந்தளிப்பில் இருந்தது, தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலையில் இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய விமானப் படையின் தாக்குதல் குறித்து நியூயார்க் டைம்சின் பாகிஸ்தன் நிருபர் சல்மான் மசூத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது. ‘இந்திய விமானங்கள் பாகிஸ்தானிய இலக்குகள் எதையும் தாக்கவில்லை என்று பாகிஸ்தான் பாதுக்காப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த வேகத்துக்கும் வெளியேறிய வேகத்துக்கும் எந்த இலக்கையும் தாக்கியிருக்க முடியாது. 

இந்திய விமானப் படையினர் கிட்டத்தட்ட சுமார் 1200 கிமீ வேகத்தில் பயணித்திருக்கிறார்கள். (அதாவது சுமார் 667 நாட் வேகம்) இந்த வேகம் என்பது சூப்பர்சானிக் எனப்படும் ஒலியின் வேகத்தை மிஞ்சியது. இந்த வேகத்தில் எப்படி ஒரு இலக்கை குறி வைத்து ஆயுதங்களை வீச முடியும்? சொல்லப் போனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தது வெறும் 30 விநாடிகளுக்கும் குறைவான நேரமே’ என்று அவர்  கூறியுள்ளார்.