இந்திய விமானப்படை விமானி மாயமானதை உறுதி செய்தது வெளியுறவுத்துறை!!

 

இந்திய விமானப்படை விமானி மாயமானதை உறுதி செய்தது வெளியுறவுத்துறை!!

இந்திய விமானப்படை விமானி மாயமானதை மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.

புதுதில்லி: இந்திய விமானப்படை விமானி மாயமானதை மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அதில் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அதிலிருந்த விமானிகள் இருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்த நிலையில், கைது செய்யப்பட்ட விமானி இவர் தான், (பெயர் அபிநந்தன்) என்ற வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. மேலும் மற்றொரு விமானி படுகாயமடைந்துள்ளதால் அவர் சிகிச்சை  பெற்று வருவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இதனிடையே, எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய அரசு, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியது. மேலும், ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட், அமிர்தசரஸ், சிம்லா, உத்தரகாண்ட், டேராடூன் உள்ளிட்ட விமான நிலையங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கைகள், விமானப்படை தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உறுதியான ஆதாரங்களை கொண்டு தான் நேற்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. பாதுகாப்பு படையின் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த சண்டையில், பாகிஸ்தானின் ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேசமயம், துரதிருஷ்டவசமாக இந்திய விமானப்படையில் மிக் 21 பைசன் ரக விமானத்தை விமானியுடன் காணவில்லை. காணாமல் போன இந்திய விமானி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். மாயமான விமானியின் நிலை குறித்த உண்மை நிலையை அறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.