இந்திய அளவில் விவசாயிகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி! செவி சாய்க்குமா மத்திய அரசு!

 

இந்திய அளவில்  விவசாயிகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி! செவி சாய்க்குமா மத்திய அரசு!

வேளாண் கடன்களை ரத்து செய்யக்கோரி இந்திய அளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி நடக்கவிருக்கிறது. 

புதுடெல்லி: வேளாண் கடன்களை ரத்து செய்யக்கோரி இந்திய அளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி நடக்கவிருக்கிறது. 

விவசாய கடன் ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 29ம் தேதி தொடங்கி 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த போராட்டம் தொடங்கியது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர். இப்போராட்டத்துக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில் மூலம் டெல்லிக்கு சென்றனர். 

டெல்லி ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களில் ஆண்கள் அனைவரும் உடனடியாக அரை நிர்வாணத்துக்கு மாறி, மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளைக் கையில் ஏந்தியபடி கோஷமிட்டவாறே நடைமேடையில் அணி வகுத்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.