இந்தியாவை சமாதானம் செய்ய சர்க்கரையை வாங்கி குவிக்கும் மலேசியா…… மத்திய அரசின் மனம் இறங்குமா?

 

இந்தியாவை சமாதானம் செய்ய சர்க்கரையை வாங்கி குவிக்கும் மலேசியா…… மத்திய அரசின் மனம் இறங்குமா?

இந்தியாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக இங்கிருந்து சர்க்கரையை அதிகளவில் மலேசியா இறக்குமதி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை கடந்த ஆண்டை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக இந்திய சர்க்கரையை அந்நாடு கொள்முதல் செய்துள்ளது.

நம்நாடு மலேசியாவிலிருந்து அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பெரிய வருவாய் மலேசிய அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த வருவாய்க்கு உலை வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது இந்தியாவுக்கு எதிராக பேசினார். 

பாமாயில்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்தியா தனது மதச்சார்பற்ற அஸ்திரவாரங்களிலிருந்து விலகுகிறது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட பயன்படுத்தப்படுகிறது என மகாதிர் முகமது  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இந்தியாவின் கோபத்தை கிளறிவிட்டார். இதனையடுத்து அந்நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய அதிகாரப்பூர்வமாக வர்த்தகர்களுக்கு மத்திய அரசு தடை போட்டது. இதனால் மலேசிய பாமாயில் வர்த்தகர்கள் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்தனர்.

மஹாதிர் முகமது

இந்நிலையில், மலேசியாவின் உள்நாட்டு அரசியல் சண்டையால் மகாதிர் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமாக முஹைதீன் யாசின் பதவியேற்றார். புதிய அரசு இந்தியாவுடன் இணக்காக செயல்பட ஆர்வமாக உள்ளது. அதேபோல் மத்திய அரசும் அந்நாட்டுடன் சுமூகமாகவே செல்ல விரும்புகிறது. இந்நிலையில் இந்தியாவுடான வர்த்தக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு நோக்கில், இங்கிருந்து அதிகளவில் சர்க்கரையை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது.

பாமாயில்

இந்த ஆண்டில் இதுவரை மலேசியா நம் நாட்டிலிருந்து 3.24 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்துள்ளது. சென்ற ஆண்டில் இந்திய வர்த்தகர்கள் மலேசியாவுக்கு 1.10 லட்சம் டன் அளவுக்கே சர்க்கரையை ஏற்றுமதி செய்து இருந்தனர். மேலும் இதற்கு முன் அதிகபட்சமாக மலேசியா நம் நாட்டிலிருந்து 3.13 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்து இருந்தது.  இந்தியாவை சமாதானம் செய்து மீண்டும் நமக்கு பாமாயிலை ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை மலேசியா மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மலேசியா தற்போது இறங்கி வருவதால் அந்நாட்டிலிருந்து மீண்டும் பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.