இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி; விஜய் மல்லையா மேல்முறையீடு

 

இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி; விஜய் மல்லையா மேல்முறையீடு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்

லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை நாடு கடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக என்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்திருந்தேன். ஆனால், இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு முன்பு என்னால் மேல்முறையீடு செய்ய இயலாது. எனவே, நாடு கடத்தும் அனுமதியை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்யவுள்ளேன்” என மல்லையா பதிவிட்டுள்ளார்.