இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

 

இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

இந்தியாவிலேயே இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்

சென்னை: இந்தியாவிலேயே இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. முதல்வர் பழனிசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், மூத்த அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாள்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக நடைபெற்ற மூன்று அமைச்சரவைக் கூட்டங்களில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. முதல் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது: தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை சார்ந்து தொழில் துவங்க 85 நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளன. வானூர்தி பூங்கா 200 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளது. இது 700 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழகத்தின் பங்கு 8.4 சதவீதம். இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம் திகழ்கிறது. சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 48 சதவீதம் பேர் உயர் கல்வி பயின்றுள்ளனர். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. உள்கட்டமைப்பிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.