இந்தியாவின் நெ.1 டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்தது ‘வோடபோன் ஐடியா லிமிடெட்’ !

 

இந்தியாவின் நெ.1 டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்தது ‘வோடபோன் ஐடியா லிமிடெட்’ !

டெல்லி:  ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்கள் இணைப்பு நிறைவுற்றதை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிடெட் உருவெடுத்துள்ளது.

இந்திய டெலிகாம் துறையில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  அதனால் இலவச வாய்ஸ்கால், 100 எஸ்.எம்.எஸ், நாள்தோறும் குறைந்தபட்சம் 1 ஜிபி டேட்டா ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைவது மூலம் அந்நிறுவனங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறையும் என்று கருதப்பட்டது. இரு நிறுவனங்களின் மொத்த கடன் தொகை ரூ.1.15 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வோடபோன் – ஐடியா இணைப்புக்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை வழங்கி விட்டது. இந்நிலையில், ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்களின் இணைப்பு இன்று நிறைவுற்றது. இதன் மூலம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிடெட் உருவெடுத்துள்ளது. ஒன்றிணைந்த புதிய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சம அளவு போட்டியளிக்கும் நிறுவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிணைந்திருக்கும் புதிய நிறுவனம் டெலிகாம் சந்தையின் வருவாயில் 40% பங்குகளை கொண்டிருக்கும் என் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 40 கோடியை எட்டியுள்ளது. புதிய நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுகின்றனர்.