இது மதச்சார்பற்ற நாடு… இந்து முன்னணி கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

இது மதச்சார்பற்ற நாடு… இந்து முன்னணி கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

ரம்ஜான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் இலவச அரிசி வழங்குவதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரிசி வழங்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

nonu-kanji-89

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். மாலையில் நோன்பு முடியும் நேரத்தில் மக்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சி ஊற்றுவது வழக்கம். இதற்காக தமிழக அரசு 5,440 மெட்ரிக் டன் பச்சரிசியை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு வழங்கியது. இதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் அரசு வழங்குவது ஏற்கக் கூடியது இல்லை. எனவே, அந்த அரிசியை மாநிலம் முழுவதும் தேவை உள்ள மக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

nonbu-kanji

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸிங் முறையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மத ரீதியாக செயல்படும் அமைப்பு சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. பல வேற்றுமைகள் இருந்தாலும் மதச்சார்பற்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அரிசி வழங்கும் அரசாணையை ரத்த செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம். அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்குவது போல் அனைத்து மக்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மே 7ம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.