இது பா.ஜ.க. ஆட்சி அல்ல… அறிவிக்கப்படாத அவசரநிலை…… காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

இது பா.ஜ.க. ஆட்சி அல்ல… அறிவிக்கப்படாத அவசரநிலை…… காங்கிரஸ் குற்றச்சாட்டு

இது பா.ஜ.க. ஆட்சி அல்ல. இது அறிவிக்கப்படாத அவசர நிலை என டெல்லி நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 

டெல்லி செங்கோட்டை

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மானு சிங்வி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டெல்லி நாட்டின் தலைநகரம். செங்கோட்டை சுற்றி 144 தடை உத்தரவு, சாலைகளில் தடைகள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல், உத்தரவின் பேரில் இன்டர்நெட் முடக்கம். கர்நாடகாவில் 144 தடை உத்தரவு, உத்தரப் பிரதேசத்தில் கைது நடவடிக்கைகள் மற்றும் அசாமில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டி.ராஜா

டி. ராஜா, சீதாராம் யெச்சூரி, அஜய் மாகென், சந்தீப் தீக்ஷித் போன்ற தலைவர்கள் 144 தடை உத்தரவின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அறிவிக்கப்படாத அவசரநிலை, இது பா.ஜ.க. ஆட்சி அல்ல. பா.ஜ.க. ஆட்சி மனிதர்களை சாப்பிடும் அரசாக காட்சி அளிக்கிறது என தெரிவித்தார். 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட செங்கோட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டி. ராஜா, சீதாராம் யெச்சூரி, அஜய் மாகென், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.