இது என்னடா மகாராஷ்டிரா அரசியலுக்கு வந்த சோதனை! ஒரு சீட் ஜெயிச்ச ராஜ் தாக்கரேவும் சரத் பவாருடன் சந்திப்பு!

 

இது என்னடா மகாராஷ்டிரா அரசியலுக்கு வந்த சோதனை! ஒரு சீட் ஜெயிச்ச ராஜ் தாக்கரேவும் சரத் பவாருடன் சந்திப்பு!

மகாராஷ்டிரா நவ்நிர்மான் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 105 இடங்களையும், சிவ சேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனையடுத்து பா.ஜ.க. ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், முதல்வர் பதவியை எங்களுக்கு 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என சிவ சேனா திடீரென குண்டை தூக்கி போட்டது.

பா.ஜ.க.

ஆனால் முதல்வர் பதவியை சிவ சேனாவுக்கு விட்டு கொடுக்க பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை. மந்திரி பதவி கூடுதலாக தருவதோடு, துணை முதல்வர் பதவியையும் தருகிறோம் என பா.ஜ.க. சிவ சேனாவுக்கு தூது விட்டதாக தெரிகிறது. ஆனால் சிவ சேனா ஒரே பிடியாக முதல்வர் பதவிதான் வேண்டும் என முறுக்கி கொண்டு இருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இழுபறி இருந்து வருகிறது. 

உத்தவ் தாக்கரே

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளார். நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து சோனியா காந்தியுடன் சரத் பவார் பேச உள்ளதாக தகவல். இருப்பினும், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சி அமைவதை தடுக்க சிவ சேனாவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் சரத் பவார் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ் தாக்கரே, சரத் பவார்

இந்த சூழ்நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்ற மகாராஷ்டிரா நவ்நிர்மான் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே நேற்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இருவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே மிகவும் நெருங்கிய உறவினர் என்பதால் தற்போதைய சந்திப்பு பல கோணங்களில் பார்க்கப்படுகிறது.