இடைத்தேர்தல் சமயத்தில் தஞ்சாவூர் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

 

இடைத்தேர்தல் சமயத்தில் தஞ்சாவூர் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

பட்டுக்கோட்டை அருகே திமுக முன்னாள் கவுன்சிலர் கோபால் சங்கர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே திமுக முன்னாள் கவுன்சிலர் கோபால் சங்கர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்தவர் கோபால் சங்கர். திமுக பிரமுகரான இவர், ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றியுள்ளார். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பள்ளத்தூரில் உள்ள அரசுப் பள்ளி வழியாக இருசக்கர வாகனத்தில் இவர் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த மர்மகும்பல், அரிவாளால் இவரின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபால் சங்கர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட சங்கருக்கும், அவருடன் பிறந்தவர்களுக்கும்  இடையே சொத்து தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சங்கரின் மைத்துனர் அன்பரசு என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.