ஆவுடையார்கோயில் திருவாதிரை தேரோட்டம்!

 

ஆவுடையார்கோயில் திருவாதிரை தேரோட்டம்!

ஆவுடையார்கோயில் மார்கழி திருவாதிரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை : 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் திருப்பெருந்துறை என சைவ சமயத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற கோயில் ஆகும். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

avudaiyar

அதுபோல் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகரை தேரில் எழுந்தருள செய்தனர்.

தேர் சக்கரத்தில் முக்கிய பிரமுகர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஆவுடையார்கோயில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

avudaiyaar

இந்த ரத தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது. இன்று சனிக்கிழமை 10 வது நாள் விழாவில் வெள்ளி ரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற உள்ளது. 

நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசித்து அருளிய உபதேச காட்சி நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்மநாதசுவாமி கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.