‘ஆழம் போவதும், கரை நடப்பதும் அவள் உரிமை’: பரியேறும் பெருமாள் இயக்குநரின் நெகிழ வைக்கும் கவிதை!

 

‘ஆழம் போவதும், கரை நடப்பதும் அவள் உரிமை’: பரியேறும் பெருமாள் இயக்குநரின் நெகிழ வைக்கும் கவிதை!

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது குழந்தையுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் தனது குழந்தையுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் வேறுபட்டிருந்த இப்படம் சாதி ரீதியாக எடுக்கப்பட்ட பல படங்களிருந்து வேறுபட்டே இருந்தது.

மாரி செல்வராஜ், ஒரு எழுத்தாளராக முன்பே கவனம் ஈர்த்தவர். இயக்குநர் ராமின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் ‘ஜார்ஜ்’ என்ற பெயரை ‘சார்ஜ்’ என்று சொல்லும் மாணவராக வருவார். தற்போது தன்னை ஒரு முழுமையான இயக்குநராக அவர் நிலை நிறுத்தியுள்ளார். 

இந்நிலையில் மாரி செல்வராஜ் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 

ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக 
எனக்கு எந்த பயமும் இல்லை பதட்டமுமில்லை 
என் மகளுக்கு நான் கடலை காட்டுவேன்
கடலின் அழகை காட்டுவேன்
அழகின் ஆழம் காட்டுவேன்
ஆழத்தில் உயிர்களை காட்டுவேன்
உயிர்களின் விநோதம் காட்டுவேன்
விநோதங்களின் விபரீதங்களை காட்டுவேன்
விபரீதங்களின் காரணம் காட்டுவேன்
காரணங்களின் முடிவுகளை காட்டுவேன்
முடிவுகளின் இழப்புகளை காட்டுவேன்
இழப்புகளிலிருந்து மீள வலு நீச்சல் காட்டுவேன்
நீச்சலின் நியாயம் காட்டுவேன்
நியாயத்தின் நிம்மதி காட்டுவேன்
இத்தனைக்கும் பிறகு அவள் பயந்தாள் 
மறுபடியும் கடல் காட்டுவேன்
அதன் அழகை காட்டுவேன்
அது அவளுடைய கடல் 
அது அவளுடைய அலை 
அவள் நம்புகிறவரை அவளுக்கு கடல் காட்டுவேன்
ஆழம் போவதும் 
கரை நடப்பதும்
அவள் உரிமை…..

என்று பதிவிட்டுள்ளார்.

 

இதில் பெண் குழந்தையை எப்படி அச்சமின்றி வளர்க்கவேண்டும் என்றும் அவள் அதையும் தாண்டி அச்சப்பட்டால், அவளை அந்த வட்டத்திற்குள் இருந்து எப்படி மீட்க வேண்டும் என்பதையும் அழகாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ‘ஆழம் போவதும்,  கரை நடப்பதும் அவள் உரிமை’ என்ற வரியில், பெண் சுதந்திரத்தையும், அதை தடுக்க நினைப்பது ஒரு போதும் சரியாகாது என்பதையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.  இதையெல்லாம் தாண்டி தகடலை விட ஆழமானது. அப்பா மகள் மீது கொண்ட அன்புஎன்பதை  ஒரு தகப்பனாக, அவர் சிந்தும் புன்னகையின் மூலமே உணரமுடிகிறது.

மாரி  செல்வராஜின் பெண் குழந்தை வளர்ப்பு குறித்த இந்த கவிதைக்கும், புகைப்படத்திற்கும்  சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.