ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் இன்று ஆஜர்

 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் இன்று ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் இன்று ஆஜராகவுள்ளனர்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் இன்று ஆஜராகவுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், அரசு மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும், கஜா புயல் நிவாரணப் பணிகளில் இருந்தததால் அவர்களுக்கு நேற்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கால அவகாசம் முடிந்ததையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருத்ணன் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகவுள்ளனர். அவர்களிடம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கை என்ன, ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்ல ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்படலாம் என தெரிகிறது.