ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஸ்டாலினுக்கு சாதாரணமாகத் தோன்றியது அதிர்ச்சி! – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

 

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஸ்டாலினுக்கு சாதாரணமாகத் தோன்றியது அதிர்ச்சி! – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்துக்காக மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர்.

ஆணவப் போக்குடன் ஆர்.எஸ்.பாரதி பேசியது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சாதாரணமாகத் தோன்றியிருப்பது வருந்தத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கருத்து தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்ய ஆதி திராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் பூவை ஜெகதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்துக்காக மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.அப்படியிருக்கையில் சட்டம் கொடுத்த வாய்ப்பை பிச்சைப் போட்டதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அந்தக் கால ஜமீன் தனத்தோடு ஆணவமாகக் கருத்துக் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கமல்ஹாசன்

தனது கட்சி செயலாளர் கூறிய கருத்து ஸ்டாலின் அவர்களுக்கு மிகச் சாதாரணமான ஒன்றாகத் தோன்றியிருப்பது வருந்தத்தக்கது.ஆர்.எஸ். பாரதி வருத்தம் தெரிவித்தால் போதுமானது என்று நினைத்தது கண்டனத்துக்குரியது.இந்த நேரத்தில் திமுகவோடு கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது.இவர்கள் குணம் எப்படியானது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே உணர வேண்டிய நேரம் இது.குறிப்பாக இடதுசாரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிதிநிலை வேறொன்று என்றம் நாளை ஆர்.எஸ்.பாரதி கூறலாம்.மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய அண்ணா ஆரம்பித்த இயக்கம் ஆணவத்தின் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும்” என்று குறிப்பிட்டுள்ளார்.