ஆரம்பித்தது அக்கப்போர்…பட்டாசு வெடித்த சிறுவன்; கம்பி எண்ணும் அப்பா!!

 

ஆரம்பித்தது அக்கப்போர்…பட்டாசு வெடித்த சிறுவன்; கம்பி எண்ணும் அப்பா!!

பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாட்டு விதித்ததற்கு பிறகு முதல் வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது

டெல்லி: பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாட்டு விதித்ததற்கு பிறகு முதல் வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாக கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, உற்பத்திக்கோ தடை இல்லை என உத்தரவிட்டது. மேலும்,  இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. தொடர்ந்து, இந்த நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், அந்த நேரத்தை வேண்டுமானால் தமிழக அரசு நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.

அதன்பின்னர், தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாட்டு விதித்ததற்கு பிறகு முதல் வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் காசிப்பூர் பகுதியில் சிறுவன் பட்டாசு வெடித்தது குறித்து, பக்கத்து வீட்டு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுவனிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன், நீதிமன்றம் விதித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதனிடையே, டெல்லியில் சர்தார் பஜார், சுப்சி மண்டி, புராரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை ஆய்வு செய்த போலீசார், சுமார் 650 கிலோ எடையிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், டெல்லியில் மாசுக் கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தற்காலிகமாக உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை மீறியதாக, கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.80 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.