ஆப்ரேஷன் திருவாரூர்… சசிகலா போட்டு தரும் ஸ்கெட்ச்?

 

ஆப்ரேஷன் திருவாரூர்… சசிகலா போட்டு தரும் ஸ்கெட்ச்?

திருவாரூரில் ஸ்டாலினையே களம் இறக்க சில சீனியர்கள் விரும்பி இருக்கிறார்கள்

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னாள் முதல்வரும், தமிழக அரசியலின் பெரும் ஆளுமையான கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் அந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இருப்பை தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் நிரூபிக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதுமட்டுமின்றி திருவாரூரில் ஸ்டாலினையே களம் இறக்க சில சீனியர்கள் விரும்பி இருக்கிறார்கள். ஆனால், திருவாரூரில் நான் நின்று வெல்வதை விடவும், நான் நிறுத்தும் வேட்பாளர் வென்றால்தான் கட்சிக்கும், தனக்கும் மரியாதை கிடைக்கும் என அவர் கூறி சீனியர்களின் விருப்பத்தை நிராகரித்துவிட்டார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

thimuka

அதேசமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்று தன்னை நிரூபித்தது போல் திமுகவின் கோட்டையாக விளங்கி வரும் திருவாரூரில் வென்று தனது ஆளுமையை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தினகரன் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் திருவாரூரில் வென்றாலோ அல்லது இரண்டாம் இடம் பிடித்தாலோ தமிழகத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி பாஜகவுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கலாம் என்ற ப்ளானில் தினகரன் இருப்பதாக கூறப்படுகிறது.

dhinna

இதற்கிடையே முதல்வர் பழனிசாமியோ, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோதே அதிமுகவால் வெல்ல முடியாத திருவாரூரை தனது காலத்தில் வென்று , அவர்கள் இரண்டு பேரால் செய்ய முடியாததை எடப்பாடி செய்து முடித்தார் என்ற பெருமையை தட்டி செல்ல திட்டமிட்டிருக்கிறாராம். அதற்காக எதை செய்தாவது திருவாரூரை கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையில் தேர்தல் வேலையை அதிமுகவினர் ஆரம்பித்திருக்கின்றனர் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எனவே இந்த தேர்தல் என்பது திமுக, அமமுக, அதிமுக மூன்று கட்சிகளுக்குமே தலை எழுத்தை நிர்ணயிக்க போவதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஈடான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

plani

இந்நிலையில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் போது திருவாரூர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக களமிறக்கலாம்? எப்படி வேலை செய்யலாம் என்பது குறித்து சசிகலாவிடம் தினகரன் ஆலோசனை கேட்பார் என கூறப்படுகிறது.

kala

திருவாரூர் மக்களின் ”பல்ஸ்” சசிகலாவுக்கும் தெரிந்தது என்பதால், டிடிவி தினகரனுக்கு அவர் கொடுக்கும் ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் அமமுகவினர். அதுமட்டுமின்றி திவாகரன் – தினகரனை இணைக்கவும் சசிகலா முயற்சிகள் மேற்கொள்வார். இதனால் சசிகலா போட்டு கொடுக்கும் ஸ்கெட்ச் படியும், தினகரனின் சில ஐடியாக்களை வைத்தும் திருவாரூரை நாங்கள் தூக்கியே தீருவோம் என்கின்றனர் அமமுகவினர்.