ஆதரவற்றோர் பெயரில் மோசடி: பழைய துணி மூட்டையில் பறிபோன ரூ.11 லட்சம்; ஒரேநாளில் கண்டுபிடித்து அசத்திய போலீசார்!

 

ஆதரவற்றோர் பெயரில் மோசடி: பழைய துணி மூட்டையில் பறிபோன ரூ.11 லட்சம்; ஒரேநாளில் கண்டுபிடித்து அசத்திய போலீசார்!

ஆதரவற்றோர் இல்லத்துக்காகப் பழைய துணி வாங்க வந்த பெண்ணிடம் சென்னை தம்பதி 11 லட்சம்  இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: ஆதரவற்றோர் இல்லத்துக்காகப் பழைய துணி வாங்க வந்த பெண்ணிடம் சென்னை தம்பதி 11 லட்சம்  இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருந்துள்ளனர். ரவியும் சுசீலாவும் அப்பகுதியில் இஸ்திரி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். 

crime

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி,  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதாகக் கூறிய  ஒருவர் ரவியின் வீட்டிற்கு வந்து பழைய துணிகளை கேட்டுள்ளார். இதனால் மனமிறங்கிய  ரவியின் மகன் பீரோவிலிருந்த பழைய துணிகளை எடுத்துக் கொடுத்துள்ளார். 

இதையடுத்து மாலை வேளைக்கு சென்று வீடு திரும்பிய தம்பதி பீரோவில் பழைய துணி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த பழைய துணிக்குள் வீடு கட்ட சேர்த்து வைத்திருந்த 11 லட்ச ரூபாய் இருந்துள்ளது. மகனிடம் இது குறித்து பழைய துணியை கொடுத்து விட்டேன் என்று கூறி அவர்கள் அளித்த துண்டு பிரசுரம் ஒன்றையும் அளித்துள்ளார்.

crime

இதைத் தொடர்ந்து துண்டு பிரசுரத்திலிருந்த முகவரிக்குச் சென்று பார்த்தனர். அங்கு அப்படி ஓர் ஆதரவற்றோர் இல்லமே இல்லை என்பது தெரியவந்தது.  இதுகுறித்து  சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  சிசிடிவி காட்சிகள் மூலம் செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 11 லட்சம் கைப்பற்றப்பட்டது. ஆதரவற்றோர் பெயரில் மோசடி செய்த மகாலட்சுமி பழையதுணிகளை வாங்கி அதை அரவிந்தன் என்பவரிடம் விற்று வந்துள்ளார். தலைமறைவான அரவிந்தனையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை மறுபடியும்  மீட்டு  தந்த காவல்துறைக்கு  ரவி மற்றும்  சுசீலா தம்பதியினர் கண்ணீர்  மல்க நன்றி கூறியுள்ளனர். இது மட்டுமின்றி ஒரேநாளில் பணத்தைக் கண்டுபிடித்த தேனாம்பேட்டை போலீசாருக்கு அப்பகுதிவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.