ஆட்சியை கவிழ்க்க கனவு காண வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

 

ஆட்சியை கவிழ்க்க கனவு காண வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிமுக ஆட்சியை கவிழ்க்க நாங்கள் கனவு காண வேண்டுமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: அதிமுக ஆட்சியை கவிழ்க்க நாங்கள் கனவு காண வேண்டுமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக பிரமுகர் வில்லவனின் இல்ல திருமண விழாவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் இன்று நடத்தி வைத்தார். அதன் பிறகு திருமணவிழாவில் பேசிய அவர், 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி செல்லுமா? செல்லாதா? என்பதில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது.

இதை சொன்னால் நான் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் கனவு காணவில்லை. நினைவாக நடக்க போகிறது. உங்கள் ஆட்சியை கவிழ்க்க நாங்கள் கனவா காண வேண்டும்? கனவெல்லாம் காண வேண்டிய அவசியமே கிடையாது. நினைவாகத்தான் உருவாக்கப் போகிறது.

பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அது முடிந்ததும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்று இங்கு பேசினார்கள்.எனக்கு ஒரு சந்தேகம், பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் வந்துவிடும் என தெரிகிறது. காரணம் இன்று தமிழகத்தில் ஒரு மைனாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பாஜக ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறது என்றார்.