ஆசிரியர்கள் போராட்டம்: விரைவில் தமிழக அரசு நல்ல முடிவு-அமைச்சர்

 

ஆசிரியர்கள் போராட்டம்: விரைவில் தமிழக அரசு நல்ல முடிவு-அமைச்சர்

ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

சென்னை: ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. அது அரசின் பொறுப்பு என கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்பாவிடில் திங்கள்கிழமை முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், ஐந்தாவது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இதனிடையே, தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.7500-லிருந்து ரூ.10,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என நேற்று நடைபெற்ற பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.