ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட்: கோப்பையை வென்றது இந்திய அணி

 

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட்: கோப்பையை வென்றது இந்திய அணி

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, கோப்பையை தட்டிச் சென்றது இந்திய அணி

டாக்கா: ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, கோப்பையை தட்டிச் சென்றது இந்திய அணி.

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட்  (U19) போட்டித் தொடரில் வங்கதேசத்தில் நடைபெற்று வந்தது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபால், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 நாடுகள் இந்த போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடின.

இந்த தொடரின் இறுதி ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்றது. அதில், இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் ஸ்கோர் சரசரவென உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்களை இந்திய அணி குவித்தது. இந்திய அணி தரப்பில், அனுஜ் ரவாத் 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 85 ரன்களும், கேப்டன் சிம்ரன் சிங் 65 ரன்களும், படோனி 52 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியாக 38.4 ஓவர்களில் 160 ரன்களில் அந்த அணி சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக, துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்ற சீனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.