ஆங் சான் சூ கீ-க்கு வழங்கப்பட்ட உயரிய விருதை திரும்பப் பெறும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

 

ஆங் சான் சூ கீ-க்கு வழங்கப்பட்ட உயரிய விருதை திரும்பப் பெறும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஆங் சான் சூ கீ-க்கு வழங்கப்பட்ட உயரிய விருதை திரும்பப் பெறுவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது

நைபிய்டாவ் (மியான்மர்): ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஆங் சான் சூ கீ-க்கு வழங்கப்பட்ட உயரிய விருதை திரும்பப் பெறுவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் சுமார் 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும் என கோரி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர் ஆங் சான் சூ கீ. கடும் போராட்டத்துக்கு பின்னர் அங்கு ஜனநாயக ஆட்சி மலர காரணமாக இருந்த அவருக்கு கடந்த 1991-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அது தவிர அவரை கவுரவித்து பல்வேறு விருதுகளை உலக நாடுகள் வழங்கியுள்ளன.

இந்நிலையில், மியான்மர் நாட்டில் அவதிப்பட்டு வரும் ரோஹிங்கியா சிறுபான்மையின இஸ்லாமியர்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆங் சான் சூ கீ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளை பல்வேறு நாடுகளும் திரும்பப் பெற்று வருகின்றன. அந்த வகையில், ரோஹிங்கியா சிறுபான்மையின இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து ஆங் சான் சூ கீ பேசாமல், மனித உரிமை மீறல்களை தூண்டுவதால் அவருக்கு அளித்த நம்பிக்கைக்கான அடையாளம் என்ற மனித உரிமைக்கான உயரிய விருதை திரும்பப் பெறுவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கீ-யின் படம் அகற்றப்பட்டது என்பதும், அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை கனடா அரசு திரும்பப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.