ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மின்சார வாகனங்கள் விலை குறைகிறது

 

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மின்சார வாகனங்கள் விலை குறைகிறது

மின்சார வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் குறைத்ததால் வரும் 1ம் தேதி முதல் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 36வது கூட்டம் கடந்த வியாழக்கிழமைன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கவுன்சிலின் தலைவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்று வேறு முக்கிய வேலைகள் இருந்ததால் கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்றது.

நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. மேலும், மின்சார வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. எனவே இன்று நடைபெற்ற கூட்டத்தில் மின்சார வாகனங்கள், சார்ஜர்கள் மீதான வரியை ஜி.எஸ்.டி. கவுன்சில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

மின்சார கார்கள்

அதனை பூர்த்தி செய்வது போல் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில், மின்சார வாகனங்கள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜர் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும், லோக்கல் ஆணையங்கள் மின்சார பஸ்சுகள் வாடகைக்கு எடுத்தால் அதற்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்கவும் ஒப்புதல் அளித்தது.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மீதான வரி குறைவதால் அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது