அவதூறு பேசுபவர்கள் மீது புகார் அளிக்க வேண்டாம்: திருநங்கைகளுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

 

அவதூறு பேசுபவர்கள் மீது புகார் அளிக்க வேண்டாம்: திருநங்கைகளுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

நடிகர் ராகவ லாரன்ஸ் அவதூறு பேசுபவர்கள் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று திருநங்கைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: நடிகர் ராகவ லாரன்ஸ் அவதூறு பேசுபவர்கள் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று திருநங்கைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகும் முன்பு நாம் தமிழர் கட்சியினர் லாரன்ஸ் மற்றும் காஞ்சனா 3 படத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்கு அவ்வாறு நடந்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் சீமான் பதிலளித்திருந்தார். 

அதையடுத்து சீமானின் நண்பரும், பட தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, ராகவா லாரன்ஸை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாகத் திருநங்கைகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சுரேஷ் காமாட்சி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் திட்டமிட்டிருந்தனர். 

raghava

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகர் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘காஞ்சனா 3’ படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னை பற்றியும் எனது சேவைகளைப் பற்றியும் அவதூறு பேசுவார்களைப் பற்றி கவலை படாதீர்கள். 

என் மீது அக்கறை உள்ள  ஒரு சில மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைப்பிடியுங்கள். நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம். நல்லதையே செய்வோம். அவர்கள், அவர்கள் வழியில் போகட்டும்.

எனக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மும்பையில் ‘காஞ்சனா’ இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதை செய்வார்’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் தனி விமானத்தில் சென்ற நிகழ்ச்சி தொகுப்பாளினி! வைரலாகும் புகைப்படம்!