அற்புத சக்தி வாய்ந்த கொடியிடை அம்மன்

 

அற்புத சக்தி வாய்ந்த கொடியிடை அம்மன்

முப்பெரும் சக்திகளில் கிரியா சக்தியாகி திருமுல்லைவாயிலில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள்  கொடியிடை நாயகி

அற்புத சக்தி வாய்ந்த கொடியிடை அம்மன்

முப்பெரும் சக்திகளில் கிரியா சக்தியாகி திருமுல்லைவாயிலில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள்  கொடியிடை நாயகி. அனைத்து செயல்களிலும் துணை புரிந்து நம்முடன் இருந்து நன்மை நோக்கி நம்மை வழிநடத்துபவள் இந்த கிரியா சக்தி.  நேரில் நின்று ஆசிர்வதிப்பதைப் போல நம்மை மெய்சிலிர்க்க வைக்கிற கொள்ளை அழகுடன், பரவசத்தில் ஆழ்த்துகிறாள் கொடியிடை அம்மன்.
சூரியனும், சந்திரனும் வழிபட்ட தலம், நினைத்ததை  கொடுக்கிற `காமதேனு’வை வசிஷ்டர் அடைந்த தலம், துர்வாசர் கோபம் நீங்கி சாந்தம் அடைந்த ஊர், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களுக்கும் பாவ விமோசனம் அளித்த தலம், பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற ஆலயம், சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம், முருகனும் திருமாலும் பூஜித்த தலம் என்று அனைத்து பெருமைகளையும் கொண்ட வடதிருமுல்லைவாயில், அம்பத்தூருக்கும், ஆவடிக்கும் இடையில் இருக்கிறது.

வாணன், ஓணன் என்ற இரு பைரவ உபாசகர்கள் நாட்டு மக்களை துன்புறுத்தி வந்தனர். மன்னன் தொண்டைமான் அவர்களை எதிர்க்க இயலாமல் ஓட்டம் பிடிக்க, வழியில் பட்டத்து யானையின் கால்கள் முல்லைக் கொடியில் சிக்கிக் கொண்டது. செய்வதறியாது, தன்னுடைய வாளால் கொடியை வெட்டி எறிய ஆரம்பித்த மன்னன் திகைத்தான். வாள் பட்டு, ரத்தம் பீறிட்டது.  முல்லைக் கொடிக்கு அடியில் `மாசிலாமணீஸ்வரர்’ (குற்றமற்ற லிங்கம்) இருந்தார்.  மன்னனுக்கு துணையாக தன் வாகனமான நந்தீஸ்வரரை அனுப்பி வைத்தார். அதன் பின்னரே தொண்டைமான் போரில் வெற்றி பெற்று குறும்பர்களின் வெற்றிக்கு காரணமான இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை வாயிலில் நிறுவி மாசிலாமணீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். வாளால் வெட்டுப்பட்டதால் குளிர்ச்சிக்காக எப்போதும் சந்தனக் காப்பிலேயே தரிசனம் தருகிறார் மாசிலாமணீஸ்வரர்.

அதனாலே இந்தக் கோயிலில் நந்தி இப்போதும், வாசலை பார்த்துக் கொண்டே இருக்கிறது. முல்லைவனம் நிறைந்த பகுதியிலே குடிகொண்டிருக்கும் கிரியா சக்தியான கொடியிடை அம்மன் நம் செயல்கள் யாவும் வெற்றியடைய ஆசிர்வதிக்கிறாள். நம்மை மட்டுமல்ல நம் குலத்தையும் காத்து நிற்பாள் என்ற மனநிறைவு தருகிறாள் அம்பிகை.வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் காலையில் இச்சா சக்தி  மேலூர் திருவுடை அம்மனையும், ஞான சக்தி நண்பகலில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனையும், மாலையில் கிரியா சக்தி கொடியிடை அம்மனையும் வழிபட  நம் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.