அரியானாவில் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை வளைத்து போட்ட பா.ஜ.க.! ஆட்சி அமைக்க தீவிரம்!

 

அரியானாவில் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை வளைத்து போட்ட பா.ஜ.க.! ஆட்சி அமைக்க  தீவிரம்!

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற போதிலும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை உடனே வளைத்து போட்டு டெல்லிக்கு அழைத்து சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்தது பா.ஜ.க.

அரியானா சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பா.ஜ.க. மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என அடித்து கூறின. ஆனால் நடந்தது வேறு. அரியானாவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

பா.ஜ.க. எம்.பி. சுனிதா துக்கல்

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ.க. மொத்தம் 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க வேண்டுமானால் இன்னும் 6 இடங்கள் தேவை என்பதால் உடனடியாக 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை தன் கட்டுப்பாட்டில் பா.ஜ.க. கொண்டு வந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 8 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் ரன்ஜீத் சிங் மற்றும் கோபால் கன்டா ஆகியோரை சிர்சா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுனிதா துக்கல் விமானத்தில் டெல்லிக்கு அழைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல்.

சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்

கன்டா மற்றும் சிங் ஆகியோர் விமானத்தில் டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிர்சா தொகுதியின் மேம்பாட்டுக்காக பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். பா.ஜ.க. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இந்த முறை சுயேட்சைகள் அல்லது சிறு கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது.