அரியவகை மான் வேட்டை வழக்கு; பாலிவுட் பிரபலங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

 

அரியவகை மான் வேட்டை வழக்கு; பாலிவுட் பிரபலங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

அரியவகை மான் வேட்டை வழக்கு தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் சைஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டவர்களுக்கு ஜோத்பூர் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

ஜோத்பூர்: அரியவகை மான் வேட்டை வழக்கு தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் சைஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டவர்களுக்கு ஜோத்பூர் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்ற சல்மான் கான், அரியவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சைஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதில், சல்மான்கானை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், சைஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், துஷ்யந்த் சிங் உள்ளிட்டவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. மேலும், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இரண்டு நாட்கள் ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்த சல்மான் கான், தனக்கு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய ஜோத்பூர் நீதிமன்றம், நடிகர் சல்மான் கானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சல்மான் கான் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை வருகிற ஏப்ரல் மதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சைஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், துஷ்யந்த் சிங் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அம்மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய ஜோத்பூர் உயர் நீதிமன்றம், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.