அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணம் அதிரடி குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி

 

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணம் அதிரடி குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் குளிர்சாதன படுக்கை வசதி பஸ்கள், கிளாசிக், சாதாரண படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் குளிர்சாதன படுக்கை வசதி பஸ்கள், கிளாசிக், சாதாரண படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட 60 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதில், குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகளுக்கு கி.மீ.,க்கு, ரூ.2. 25 பைசா சாதாரண படுக்கை பேருந்துகளுக்கு ரூ.1.55 பைசா, கழிப்பிட வசதியுடன் கூடிய கிளாசிக் பேருந்துகளுக்கு ரூ.1.15 பைசா என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது ஆம்னி பஸ்களின் கட்டணத்தை விட கூடுதலாக இருந்ததால், பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது.

பல வழித்தடங்களில் குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகள் ஆட்களின்றி இயக்கப்பட்டதால், நஷ்டம் ஏற்பட்டு இயக்கத்தை அதிகாரிகள் நிறுத்தினர். பின், கட்டணத்தை குறைக்க அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

இதனையேற்று, திங்கள் முதல் வியாழன் வரை கட்டணத்தை குறைத்தும், வெள்ளி முதல் ஞாயிறு வரை பழைய கட்டணத்தை வசூலிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

அதன்படி, வார நாட்களில் குளிர்சாதன படுக்கை பஸ்களுக்கு, கி.மீ.,க்கு, 45 காசு குறைத்து, 1.80 ரூபாய், சாதாரண படுக்கை பஸ்களுக்கு, 20 காசு குறைத்து, 1.35 ரூபாய், கிளாசிக் பஸ்களுக்கு, 10 காசு குறைத்து, 1.05 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த கட்டண குறைப்பால், விரைவு போக்குரவத்துக்கழக பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அதிகரிக்கும், வருவாயும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்சாதன படுக்கை வசதி பஸ் கட்டணம் விபரம்:
 

          நகரங்கள்       பழைய கட்டணம்       புதிய கட்டணம் 
சேலம் – சென்னை   725 655
கோவை – சென்னை  1,080  975
கோவை – பெங்களூரு  805 725
சென்னை – மதுரை  975 880
சென்னை – தேனி  1,115  970 
சென்னை – நெல்லை 1,315  1,145
சென்னை – திருச்சி  705 635
பெங்களூரு – நாகர்கோவில்  1,480  1,345
சென்னை – மைசூரு  1065 965 
சென்னை – பெங்களூரு  775  700

இதேபோல், கிளாசிக் மற்றும் சாதாரண படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.