‘அரசியலை அதிகமாக தெரிந்துகொள்ள மாணவர்களுக்கே வாய்ப்பு’ – ஸ்டாலின் பேச்சு

 

‘அரசியலை அதிகமாக தெரிந்துகொள்ள மாணவர்களுக்கே வாய்ப்பு’ – ஸ்டாலின் பேச்சு

தற்போதுள்ள அரசியல்வாதிகளை விட, இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கே அரசியலை அதிகமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

நெல்லை: தற்போதுள்ள அரசியல்வாதிகளை விட, இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கே அரசியலை அதிகமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், “இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற தூய உள்ளத்தோடு, திமுக இளைஞர் அணி சார்பில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. 

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 2வது பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாயும், 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை மொத்தம் 7 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழலில் அரசியல்வாதிகளை விட, இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கே அரசியலை அதிகமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் வந்து சேர்ந்திருக்கிறது” என பேசியுள்ளார்.