அரசியலில் ரஜினி ஹீரோவா? ஜீரோவா?-அமைச்சர் ஜெயக்குமார்

 

அரசியலில் ரஜினி ஹீரோவா? ஜீரோவா?-அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலில் ரஜினி ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தான் முடிவு செய்வர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை: அரசியலில் ரஜினி ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தான் முடிவு செய்வர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சினிமா ஷூட்டிங், அரசியல் கட்சி பணிகள் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் ஏழு பேர் குறித்தும், பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது குறித்தும் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து சர்ச்சையானது.

இதையடுத்து, இதற்கு விளக்கமளிக்கும் பொருட்டு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை மீண்டும் இன்று சந்தித்த ரஜினி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாத அளவு நான் முட்டாள் இல்லை. நேற்று கேட்கப்பட்ட கேள்வியில் தெளிவு இல்லை. தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன்.  7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர். பேரறிவாளன் பரோலில் வெளியில் வந்தபோது நான் அவரிடம் தொலைபேசியில் 10 நிமிடங்கள் பேசி ஆறுதல் கூறினேன் என்றார்.

மேலும், பாஜக-வுக்கு எதிரான மெகா கூட்டணி குறித்து பேசிய அவர், 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்க சென்றால் யார் பலசாலி என கேள்வி எழுப்பினார்.

அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடத்தில் விமர்சனத்தை எழுப்பிய நிலையில், அது குறித்தும் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நல்ல பதவியில் இருக்கும் அமைச்சர்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று அமைச்சர்களை நோக்கி நாங்கள் கேட்டால் எப்படி இருக்கும் என்றார்.

இந்நிலையில், நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு என்று கூறியது தரம் தாழ்ந்த கருத்து கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்தபோதும், தற்போதும் கருத்துக்களை மாறி கூறுபவர்களுக்கு தான், நான் கூறியது பொருந்தும் என தெரிவித்த ஜெயக்குமார், 7 பேரை தெரியாது என்ற ரஜினி அமைச்சர்களை விமர்சிக்க தேவையில்லை. 7 பேர் விவகாரம் குறித்து தெரியாது என ரஜினி அளித்த பதிலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திரையுலகில் ரஜினி ஹீரோவாக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவர் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தான் முடிவு செய்வர் எனவும் தெரிவித்துள்ளார்.