அரசாங்கத்தை கேள்வி கேட்பது டிரெண்ட் என மோடி சொல்கிறார்..ஆனால், ரஷ்யாவில் என்ன நடக்கும் தெரியுமா!?

 

அரசாங்கத்தை கேள்வி கேட்பது டிரெண்ட் என மோடி சொல்கிறார்..ஆனால், ரஷ்யாவில் என்ன நடக்கும் தெரியுமா!?

ரஷ்ய அரசாங்கம் அல்லது அதிபர் புடின் உள்பட அரசாங்க அதிகாரிகளை அவமதிக்கும் ஆன்லைன் பதிவுகளை பதிவிடுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது

மாஸ்கோ: ரஷ்ய அரசாங்கம் அல்லது அதிபர் புடின் உள்பட அரசாங்க அதிகாரிகளை அவமதிக்கும் ஆன்லைன் பதிவுகளை பதிவிடுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய தகவல் ஆணைய விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “தகவல்கள் இணையதளங்களில் வெளியாகும்போது வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது. அரசாங்கத்தை கேள்வி கேட்பது நாட்டு மக்களின் உரிமை என்பதுமட்டுமல்லாது ஜனநாயகத்தின் ஜீவனும் அதுதான். கேள்வி கேட்கும் உரிமை இருந்தால்தான் ஜனநாயகம் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்.  அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.

அதே பிரதமர் மோடி, கடந்த 5-ம் தேதியன்று குஜராத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய போது, அரசாங்கத்தை கேள்வி கேட்பது தற்போது டிரெண்ட் ஆகி உள்ளது. அனைத்தையுமே அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் போக்கு மக்களிடையே சமீபத்தில் அதிகரித்துள்ளது. செய்யாத வேலைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பதில்களையும் அவர்கள் தேடுகிறார்கள். இது நம் நாட்டில் ஒரு பாரம்பரியம் அல்ல என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்ய நாட்டில் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, நாடு, சமூகம் மற்றும் அதிபர் புடின் உள்பட அரசாங்க அதிகாரிகளை அவமதிக்கும் ஆன்லைன் பதிவுகளை பதிவிடுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆன்லைனில் அவ்வாறு பதிவிடுவோருக்கு இந்திய மதிப்புப்படி முதல் தடவை ரூ.1,06,315 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதனையே மறுபடியும் ஒருவர் செய்யும் பட்சத்தில் இந்த அபராதத் தொகை இருமடங்காக விதிக்கப்படும்.

ஒருவேளை போலி செய்திகளை ஆன்லைன் ஊடகங்கள் வெளியிடுவதாக ரஷ்ய அதிகாரிகள் கருதினால், அதனை தடை செய்யவும், அபராதம் விதிக்கவும், சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த புதிய சட்டம் வழி செய்கிறது. இந்த புதிய சட்டத்திற்கு வலது சாரி அமைப்புகள் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.