அய்யா எங்க வாழ்க்கையே போச்சு… மத்திய குழுவிடம் கதறிய டெல்டா மக்கள்

 

அய்யா எங்க வாழ்க்கையே போச்சு… மத்திய குழுவிடம் கதறிய டெல்டா மக்கள்

கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவிடம் பொதுமக்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை: கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவிடம் பொதுமக்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். தன்னார்வலர்களும், அரசும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசு புயல் நிவாரண நிதியாக ரூ 15,000 கோடி ஒதுக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று முன்தினம் தமிழகம் வந்தது. தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை செய்த பிறகு மத்திய குழு தனது ஆய்வை தொடங்கியது.

அந்த வகையில் புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு குழு சென்றது. அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர். அவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் புயல் பாதிப்பை விளக்கி கூறினர். அப்போது மத்திய குழுவினரை கண்டதும், அங்கு வீடுகளை இழந்த பெண்கள்  “அய்யா…புயலால் எங்கள் வாழ்க்கையே போச்சு. இனி என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை என அவர்களிடம் கதறி அழ தொடங்கினர். 

அப்போது, உடன் வந்த அமைச்சர், கலெக்டர் ஆகியோரும் ஆறுதல் கூறினர். தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியில் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர். இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்ட முழுவதும் உள்ள சேத விவரங்களை கேட்டறிந்தனர்.

இதனையடுத்து இன்று தஞ்சாவூரில் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் பிற்பகல் திருவாரூர் சென்று அங்கு ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் நாளை நாகப்பட்டினத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அங்கிருந்து அவர்கள் நாளை காரைக்கால் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.