அமெரிக்காவின் மிரட்டலை புறந்தள்ளியது இந்தியா; ரஷ்யாவுடன் ஏவுகணை வாங்க ஒப்பந்தம்

 

அமெரிக்காவின் மிரட்டலை புறந்தள்ளியது இந்தியா; ரஷ்யாவுடன் ஏவுகணை வாங்க ஒப்பந்தம்

ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்- 400 ஏவுகணைகளை வாங்குவது உள்ளிட்ட 20 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன

டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்- 400 ஏவுகணைகளை வாங்குவது உள்ளிட்ட 20 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

இந்தியா-ரஷ்யா இடையேயான 19-வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்துள்ளார். ரஷ்ய அதிபரின் இந்திய வருகையின் போது, ரூ.36,792 கோடி மதிப்பிலான எஸ்- 400 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டம் இறுதி செய்யப்பட்டது. ஆனால், ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனவே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்- 400 ஏவுகணைகளை வாங்குவது உள்ளிட்ட 20 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு நாட்டு ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

இதையடுத்து, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவது, விண்வெளி துறை, அணு சக்தி, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் கீழ் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த ஏவுகணை இந்த பாதுகாப்பு துறைக்கு மேலும் வலு சேர்க்கும். இந்த ஏவுகணைகள் உலக அளவில் அதிநவீனமானவை. இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து சீனா முதன் முதலில் 2014-ஆம் ஆண்டு வாங்கியது. அதன் பிறகு இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. ஆனால் இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை புறந்தள்ளி ஏவுகணை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புடின், ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடு இந்தியா. விண்வெளிக்கு ஆட்களை அனுப்ப இந்தியாவிற்கு ரஷ்யா உதவி செய்யும். இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்.

பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவிற்கு பெரும் பங்கு உள்ளது. இரு நாடுகளும் சிறப்பான உறவை கொண்டு உள்ளன. இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இருநாட்டு உறவு வலுப்பெறும் என்றார்.