அப்பாவின் பெயரை காலி செய்த சோசியல் மீடியா: சூர்யா காட்டம்

 

அப்பாவின் பெயரை காலி செய்த சோசியல் மீடியா: சூர்யா காட்டம்

மீம்ஸ்கள் வழியாக வெளிப்படும் வெறுப்பும், வக்கிரத்தனமும் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மோசமான தாக்கம் குறித்து நடிகர் சூர்யா தான் எழுதிய சிறப்புக் கட்டுரை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை: மீம்ஸ்கள் வழியாக வெளிப்படும் வெறுப்பும், வக்கிரத்தனமும் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மோசமான தாக்கம் குறித்து நடிகர் சூர்யா தான் எழுதிய சிறப்புக் கட்டுரை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களை நாம் உபயோகிக்கும் முறை பற்றி விவரித்துள்ள சூர்யா, கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி 7 டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். இந்த புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க உதவாத சமூக ஊடகத்தில் பகிரப்படும் கேலியான மீம்ஸ்களும், அதற்கு நாம் போடும் லைக்ஸ்களும் நமது அலட்சியத்தையும், அறிவீனத்தையும் வெளிப்படுத்துகிறது.

வானிலை அறிவிப்புக்கு மாணவர்கள் விடுமுறையை எதிர்ப்பார்ப்பது போல் மீம் கிரியேட்டர்கள் நக்கலடிக்கவும், வெறுப்பை கொட்டவும் காத்திருக்கின்றனர். மது அடிமைகளுக்குக் குடிக்காமல் இருந்தால் எப்படி கை கால்கள் நடுங்குமோ, அதுபோலத் தங்களுடைய அபத்த நகைச்சுவைக்கு லைக், ஷேர், கமென்ட் அதிகமாகக் கிடைப்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கத் தயாராக இருக்கிறோம். நகைச்சுவை என்பது மற்றவர்களைக் காயப்படுத்துவது என்று யார் இந்தத் தலைமுறைக்குச் சொன்னது?

ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்கும் நகைச்சுவை உணர்வு, இணையத்தில் ஒரு தொற்றுநோயைப் போலப் பலரின் தனிப்பட்ட வாழ்வைப் பலி கேட்கிறது. பொறுப்புணர்வற்ற பதிவுகளைப் பரப்புவதை நிறுத்தினால், அவை உருவாவது தானாகவே குறையும். இன்னொரு பக்கம் பிரபலங்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது சமூக ஊடகங்கள் நிகழ்த்துகிற அத்துமீறல் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது.

sivakumar

சமூக ஊடகங்களின் குரூர மனோநிலைக்கு என்னுடைய தந்தையும் சமீபத்தில் இலக்கானார். ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரை இடைமறித்து ஓர் இளைஞர் செல்ஃபி படம் எடுக்க முயன்றார். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்போனைத் தட்டிவிட்டார். இச்சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவரது 75 ஆண்டு கால வாழ்வையே கேலிசெய்தது. ‘அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம்என்பதே என் கருத்தும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான். ஆனால், அந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள்? ‘விமர்சனம்என்ற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும் வழங்காமலிருப்பதுதான் எதிர்வினையா?

பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். இறப்பு நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தப் போகுமிடத்திலும், சிலர் செல்ஃபி எடுக்க கட்டாயப்படுத்தும்போது அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறுவது எனக்கே தனிப்பட்ட அனுபவம்.

தொழில்நுட்பத்தைக் குறைகூற ஏதுமில்லைபிரச்சினை தொழில்நுட்பத்தின் மீது இல்லை. பயன்படுத்தும் நம்மிடம் வெளிப்படும் மனப்பான்மையில்தான் தீதும் நன்றும் இருக்கிறது வெறுப்பை விதைப்பதில் காட்டுகிற ஆர்வம், பரப்புவதில் இருக்கிற துடிப்பு, அதைத் தடுப்பதிலும் இருக்க வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பு.

பின்குறிப்பு: ‘இவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு அவரை அட்மிட் பண்ணு’ என தினம் தினம் தாக்குவதற்குப் புதிய இலக்குகளைத் தேடி அலையும் சமூக ஊடகங்களில் என்னையும் ‘அட்மிட்’ செய்யக்கூடும் என்பதை முழுமையாக உணர்ந்துகொண்டே இதை எழுதுகிறேன்!

– சூர்யா, திரைப்பட நடிகர்.