அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

 

அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

தொலைப்பேசி ஒட்டு கேட்பு விவகாரம் மாதிரி, அப்படியே ஆபரேஷன் லோட்டஸ் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் நல்லா இருக்கும் என கர்நாடக பா.ஜ. முதல்வர் எடியூரப்பாவை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கிண்டல் அடித்தார்.

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. அதிக தொகுதிகளை வென்ற போதிலும், ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனையடுத்து காங்கிரஸ்- ஜனதா தளம் (மதசார்ப்பற்ற) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தன. இருப்பினும்  குமாரசாமி தலைமையிலான இந்த கூட்டணி அரசு நீண்ட நாள் நீடிக்கவில்லை. அந்த இரண்டு கட்சிகளிலும்  அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்ததால் அந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. இதன் பின்னணியில் பா.ஜ.வின் ஆபரேஷன் லோட்டஸ் இருப்பதாக காங்கிரசும், ஜனதா தளமும் குற்றம் சாட்டின.

எடியூரப்பா

காங்கிரஸ்-ஜனதா தள கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து பா.ஜ. ஆட்சியை பிடித்தது. பா.ஜ.வின் எடியூரப்பாக முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், கடந்த வாரம் ஜனதா தளம் (மதசார்ப்பற்ற) கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தற்போது அதிருப்தியாளராகவும் மாறியுள்ள ஏ.எச். விஸ்வநாத் பரப்பரப்பான குற்றச்சாட்டை ஒன்றை கூறினார். முந்தைய காங்கிரஸ்-ஜனதா தள (மதசார்ப்பற்ற) கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் போது நான் உள்பட 300 தலைவர்களின் போன்கள் குமாரசாமி அரசால் ஒட்டு கேட்கப்பட்டதாகவும், உளவு பார்க்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஏ.எச். விஸ்வநாத்

இந்த போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் பி.எஸ். ஏடியூரப்பா நேற்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சித்தராமையா டிவிட்டரில், போன் ஒட்டுகேட்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றும் எடியூரப்பா அரசின் முடிவை வரவேற்கிறேன். ஆனால் கடந்த காலங்களில் தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு சி.பி.ஐ.யை தனது கைப்பாவையாக பா.ஜ. பயன்படுத்தியது. ஆனால் இந்த முறை அந்த நோக்கத்தில் கர்நாடக பா.ஜ. தலைவர்கள் பண்ண மாட்டார்கள் என நான் நம்புகிறேன். என்று பதிவு செய்து இருந்தார். 

மேலும், ஆபரேஷன் லோட்டஸ் குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டால் நன்றாக இருக்கும் என எடியூரப்பாவை கிண்டல் அடிக்கும் வகையில் கூறியுள்ளார்.