அன்று யுத்த களம் இன்று சுற்றுலா தளம்…. கார்கில்-ன் புதிய முகம்….

 

அன்று யுத்த களம் இன்று சுற்றுலா தளம்…. கார்கில்-ன் புதிய முகம்….

பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் பந்தாடிய கார்கில் பகுதி தற்போது சுற்றுலா மையமாக உருமாறி வருகிறது.

காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியை 1999 மே மாதம் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இந்த தகவல் அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிப்பு செய்து இருந்த பகுதிக்கு இந்திய ராணுவம் சென்றது. இதனையடுத்து 1999 மே 3ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியது. இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் ஜூலை 26ம் தேதி பாகிஸ்தான் அடிபணிந்தது. 

கார்கில்

இந்தியா-பாகிஸ்தான் மோதலை அடுத்து கார்கில் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பொதுவாக கார்கில்  மிகவும் அமைதியாக பகுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பால் அது யுத்தகளமாக மாறியது. போர் முடிந்த பிறகு அந்த பகுதியை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். இது தொடர்பாக கார்கில் மேம்பாட்டு ஆணையத்தின் செயல் என்ஜினீயர் ஷபிர் ஹூசைன் கூறியதாவது: 2000ம் ஆண்டில் கார்கிலை சுமார் 300 பேர் சுற்றி பார்த்தனர். 

கார்கில்

2004ம் ஆண்டு வரை கார்கிலுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. அதேசமயம் அந்த ஆண்டுக்கு பிறகு அங்கு சுற்றுலாவுக்காக வருபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 2017ம் ஆண்டில் கார்கிலுக்கு 64 ஆயிரம் பேர் சுற்றிபார்க்க வந்தனர். 2018ல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. மேலும், அங்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

கார்கில் பகுதியில் தற்போது 250க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. 1999ம் ஆண்டு வரை கார்கில் பகுதியில் வெறும் 5 முதல் 6 ஹோட்டல்களே இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.