அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்? அதிர்ச்சியில் டிடிவி ஆதரவாளர்கள்

 

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்? அதிர்ச்சியில் டிடிவி ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சரும் டிடிவி ஆதரவாளருமான செந்தில் பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: முன்னாள் அமைச்சரும் டிடிவி ஆதரவாளருமான செந்தில் பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட அதிமுகவில் மிக முக்கியமான ஆளுமையாக பார்க்கப்பட்ட இவர், டிடிவி தினகரன் – எடப்பாடி பழனிசாமி இடையே பிரிவு ஏற்பட்ட போது, டிடிவி ஆதரவாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அதன்பின், நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவதற்கு மிகக் கடுமையாக களப்பணி ஆற்றியவர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடுமையான உழைப்பிற்குப் பின் கிடைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தினகரனுக்காக இழந்ததில் இருந்து அவர் மீது செந்தில் பாலாஜி அதிருப்தியாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாளை செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் டிடிவி ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.