அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆற்றுப் படுகை மேலாண்மை சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்ட முன்வரைவு வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படும் இந்த சட்டம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தீங்கை ஏற்படுத்தும்.

காவிரி உள்ளிட்ட அனைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கும் 1956-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நதி வாரியங்கள் சட்டத்தின் மூலமாகவே தீர்வு காணப்பட்டு வருகிறது. இப்போது அந்த சட்டத்திற்கு பதிலாக ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த புதியச் சட்டத்தின்படி காவிரி உள்ளிட்ட 13 ஆறுகளின் நீர்ப்பகிர்வு சிக்கலுக்கு தீர்வு காண 13 ஆற்றுப்படுகை ஆணையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆணையத்திலும் ஒரு நிர்வாகக்குழுவும், ஒரு செயலாக்கக்குழுவும்  இருக்கும். நிர்வாகக் குழுவில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருப்பர். நிர்வாகக் குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் சுழற்சி முறையில் பதவி வகிப்பார்கள். ஆற்று நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக  மாநில முதலமைச்சர்கள் ஆண்டுக்கு இருமுறை சந்தித்து பேசுவார்கள் என்றும், இதன்மூலம் ஆற்று நீர் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 45 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நடுவர் மன்றம் வரையறுத்தவாறு முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை என்ற போதிலும், இதற்கு முன்பிருந்ததை விட இப்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது. காவிரியின் குறுக்கே  உள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எப்போது வழங்கப் படுகிறதோ, அப்போது காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். எனவே, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு என்பது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப் படுவது மட்டுமே. மற்ற யோசனைகள் அனைத்தும் காவிரி பிரச்சினையில் பின்னடைவையே ஏற்படுத்தும்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டமும், அதில் கூறப்பட்டுள்ள யோசனைகளும் புதிததல்ல. ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டத்தை கடந்த 2012&ஆம் ஆண்டிலேயே  கொண்டு வந்து நிறைவேற்ற, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயன்றது. ஆனால்,  மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக அது சாத்தியமாகவில்லை. அந்த சட்ட முன்வரைவு தான் 6 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இப்போது கொண்டுவரப்படவுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள யோசனையும் ஏற்கனவே காவிரி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டவை தான். காவிரி ஆணையத்தின் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக முதலமைச்சர்களும் இருந்தனர். இப்போது ஆற்றுப்படுகை மேலாண்மை ஆணைய நிர்வாகக் குழுவில் பிரதமருக்குப் பதில் முதல்வர்களில் ஒருவரே சுழற்சி முறையில் தலைவராக இருப்பார் என்பது மட்டும் தான் ஒரே வித்தியாசம் ஆகும்.

பிரதமர் தலைமையிலான ஆணையத்திற்கே அதிகாரம் இல்லாத போது, முதலமைச்சர்கள் இடம்பெறும் குழுவால் என்ன செய்து விட முடியும். நிர்வாகக் குழுவில் இடம் பெறும் அனைத்து முதலமைச்சர்களும் தங்கள் மாநிலப் பிரச்சினைகளையே பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதால் நதிநீர் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதற்கு தான் இந்த சட்டம் வகை செய்யுமே தவிர பிரச்சினைகளை தீர்க்காது. காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் என்பது ஏற்கனவே அரைகுறையாகவாவது தீர்வு காணப்பட்ட ஒரு பிரச்சினையை தொடக்கம் முதல் விவாதிப்பதற்கான,  பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடு ஆகும். இது காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துமே தவிர, தமிழகத்திற்கு பயனளிக்கும் எந்த தீர்வையும் ஏற்படுத்த உதவாது.

எனவே, காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் தேவையற்றது. அதற்கான சட்ட முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு  மத்திய அரசு வழங்க வேண்டும். அதுதான் தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் நன்மையாக அமையும் என கூறியுள்ளார்.