அடுத்த கலைஞராக மாறுவாரா ஸ்டாலின்? எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள்

 

அடுத்த கலைஞராக மாறுவாரா ஸ்டாலின்? எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள்

திருநெல்வேலி: மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வருவார் என திமுக பொருளாளர் அதிரடியாக கூறியதை அடுத்து ஸ்டாலின் அடுத்த கலைஞராக மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவிற்கு பிறகு திமுக-வின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக என்ற மாபெரும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது. மேலும், ஒரு எதிர்க்கட்சி தலைவராக அவரின் செயல்பாடுகள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் பாஜக எதிர்ப்பு கொள்கையை அவர் பின்பற்றி வருவதால் அவரை தேசிய அளவில் பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பு கொண்டு 3-வது அணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து ஸ்டாலின் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்து வருவதாக தெரிகிறது. மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்று திமுகவின் பலத்தை தேசிய அளவில் நிரூபிக்கவும் அவர் தயாராகி வருகிறார்.

இந்நிலையில், திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகன் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், மு.க.ஸ்டாலின் கை காட்டும் நபரே இந்தியாவின் அடுத்த பிரதமர். மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்க கூடிய சக்தியாக ஸ்டாலின் உருவாகி உள்ளார் என்றார்.

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி தேசிய அளவில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக இருந்தார்.  மேலும், வி.பி சிங், தேவகவுடா போன்ற பிரதமர்களை அவர் உருவாக்கினார். அதற்கு காரணமாக பலர் கூறுவது, கருணாநிதியின் அரசியல் ராஜதந்திரத்தை. அதுமட்டுமின்றி மத்தியில் அவர் ஆளுமை செலுத்தியதற்கு மிக முக்கியம், மத்தியில் ஆட்சியமைப்பவர்களுடன் எந்த நேரத்தில் அனுசரித்து போக வேண்டுமோ அந்த நேரத்தில் அனுசரித்து போவார், அதே நேரத்தில் மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிப்பது, தமிழகத்திற்கு அழிவு தரும் திட்டங்களை கொண்டு வருவது போன்ற செயல்களில் மத்திய ஆட்சியாளர்கள் களமாடினால் கருணாநிதியே போராட்ட களத்தில் குதித்து மத்தியை ஒருவழி செய்துவிடுவார். 

ஆனால்  பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை கொள்கையை ஸ்டாலின் கொண்டிருந்தாலும் அவர் மத்திய பாஜக கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக இதுவரை வீரியமான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. திமுகவின் அடையாளமே போராட்டம் என்று இருந்த காலம் சென்று தற்போது திமுக  அடையாளப்போராட்டத்தை நடத்தி வருகிறது. பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் மட்டும் நிற்காமல் தேசிய அளவில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஸ்டாலின் வலுவாக திமுகவின் போராட்டத்தை  முன்னெடுக்க வேண்டும். எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில் கருணாநிதி இந்திரா காந்தியை மிக காத்திரமாக எதிர்த்தார். தற்போதும் இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலினின் போராட்டங்கள் வீரியமாக இல்லை என பலர் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி  எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலினின் செயல்பாடுகள் மீது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதியை பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது அவர் மிகுந்த உற்சாகத்தோடும், தனது போராட்டத்தால், வாத திறமையால், செயல்பாடுகளால் ஆளும் தரப்பினரை அதிர வைத்து தன்னை நோக்கி பாஸிட்டிவ் விமர்சனங்களையே வர வைப்பார். 

அதுபோல் ஸ்டாலினும் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது தன்னை நோக்கி பாஸிட்டிவ் விமர்சனங்களையே வரவைக்க வேண்டும். மேலும், தேசிய தலைவர்கள் அவர் மீது தற்போது வைத்திருக்கும் கவனத்தை ஸ்டாலின் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். எனவே தேசிய அளவில் ஒரு பிரதமரை உருவாக்கும் அடுத்த கருணாநிதியாக ஸ்டாலின் மாறுவாரா? என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்புகளிடையே உருவாகியுள்ளது.