‘அசுரன் திரைப்படம் உங்களை புரட்டி போடும்’ : பாலிவுட் இயக்குநர் புகழாரம்!

 

மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

அசுரன் திரைப்படம் உங்களை புரட்டி போடும் என்று  பிரபல இயக்குநரும்  தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாராட்டியுள்ளார். 

asuran

இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.இதையடுத்து அசுரன் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

இந்நிலையில் அசுரன் படம் குறித்து பிரபல இயக்குநரும்  தயாரிப்பாளருமான கரண் ஜோஹர்  கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘அசுரன் திரைப்படம் உங்களை புரட்டி போடும். வெற்றிமாறனின் கலை நுணுக்கம், கதை சொல்லும் விதத்தில் மிரண்டு விட்டேன். அற்புதம் என்னும் வார்த்தையைக் கூட தனுஷ் மிஞ்சிவிட்டார். புயலுக்கு முன் அமைதி என்பது போல அவரது நடிப்பு ஈடு இணையில்லாமல் உள்ளது. அசுரனை தயவுசெய்து பாருங்கள். சினிமாவுக்கு கிடைத்த வெற்றி’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.