அகத்தியர் போற்றிய தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா

 

அகத்தியர் போற்றிய தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வருகிற 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

நெல்லை : 

யானையைப் போன்று காட்சியளிப்பதால் வாரண மலை என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில் மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக்கிறார். 

thoranamalai

இந்த மலையில் 64 சுனைகள் அமைந்துள்ளது. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.

இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது என்கிறார்கள். இத்தனைச் சிறப்புகளுக்கும் சிகரம் வைத்தாற்போன்று, தோரண மலையின் உச்சியில் ஒரு குகையில் கோயில் கொண்டிருக்கிறான் அழகு முருகன்.

 

thoranamalai

கிட்டத்தட்ட ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட படிகள் ஏறி மலை உச்சியை அடைந்தால் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

இத்தகைய சிறப்புக்குரிய தோரணமலை முருகன் கோயில் தைப்பூச விழா வரும் 21 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

thoranamalai

அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும்,அகத்திய பூஜையும்,மதியம் 2 மணிக்கு ஊட்டி படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனமும், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீக பட்டிமன்றமும், நடைபெற உள்ளது.  

40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயிலின் நிர்வாகம்,சீரமைப்பு மற்றும் நித்ய பூஜை ஆகியவற்றை கோயிலின் அறங்காவலர் தனது பொறுப்பில் எடுத்து சிரத்தையுடன் செய்துவருகிறார். அதே போல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.