வாகனத்திற்கு வழிவிடும் தகராறில் இளைஞர் அடித்துக்கொலை… பஞ்சாயத்து பேச சென்றபோது விபரீதம்!

 

வாகனத்திற்கு வழிவிடும் தகராறில் இளைஞர் அடித்துக்கொலை… பஞ்சாயத்து பேச சென்றபோது விபரீதம்!

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவது தொடர்பான தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தென்கரை கால்வாயின் கரைகளில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிச்சம்பட்டி பகுதியில் நடந்து வரும் பணிக்காக நேற்று விருதுநகரை சேர்ந்த செந்தில் என்பவர் டிராக்டரில் மண் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜா(28), பிரபாகரன் (28) ஆகியோர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் டிராக்டருக்கு பின்னால் வந்துள்ளனர்.

அப்போது, அவர்கள் ஹாரன் அடித்து வழி கேட்டும், டிராக்டர் ஓட்டுநர் வழிவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, இளைஞர்களுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த பிரபு (35) என்பவரும், டிராக்டர் ஓட்டுநருக்கு ஆதரவாக மணவாசி கிராமத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் தர்மதுரை என்பவரும் பேசி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து இன்று காலை பிச்சம்பட்டி கிராமத்தில் இருதரப்பினர் இடையே சமரச கூட்டம் நடைபெற்று உள்ளது.

வாகனத்திற்கு வழிவிடும் தகராறில் இளைஞர் அடித்துக்கொலை… பஞ்சாயத்து பேச சென்றபோது விபரீதம்!

இதில், பிச்சம்பட்டியை சேரந்த இளைஞர்கள் மற்றும் பிரபு உள்ளிட்டோரும், மணவாசி கிராமத்தை சேர்ந்த தர்மதுரை ஆதரவாளர்களும் பங்கேற்று உள்ளனர். பேச்சுவார்த்தையின் இடையே தர்மதுரை ஆதரவாளர்கள் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் பிரபுவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த பிரபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல், குளித்தலை டிஎஸ்பி கீதாஞ்சலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இளைஞர் கொலை காரணமாக பதற்றம் நீடிப்பதால், மணவாசி மற்றும் பிச்சம்பட்டி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.