118 பவுன் நகைகளுடன் எஸ்கேப்… பதறிய நகைக்கடன் ஓனர்… ஏர்போர்ட்டில் சிக்கிய வடமாநில வாலிபர்!

 

118 பவுன் நகைகளுடன் எஸ்கேப்… பதறிய நகைக்கடன் ஓனர்… ஏர்போர்ட்டில் சிக்கிய வடமாநில வாலிபர்!

வடபழனியில் நகை பட்டறையில் இருந்து 118 பவுன் நகையை திருடி சென்ற வட மாநில வாலிபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை வடபழனி, கங்கையம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சுலாதேஷ் குமார்மாஜி (49), இவர் வீட்டிலேயே சொந்தமாக நகை பட்டறை வைத்து கொண்டு தங்கநகைகளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது நகை பட்டறையில் கடந்த 6 மாதமாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அசிஸ் ரகுமான் (30), என்பவர் வீட்டின் மேலே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அசிஸ் ரகுமான் வீட்டில் இருந்து காணாமல் போய் விட்டார். இதனால் சந்தேகமடைந்த சுலாதேஷ் நகைபட்டறைக்கு சென்று சோதனை செய்த போது 118 பவுன் கொண்ட 39 தங்க செயின்கள் இல்லாமல் போனதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் நகையை அசிஸ் ரகுமான் திருடி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனால் சுலாதேஷ், அசிஸ் ரகுமானின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு விசாரித்த போது ரகுமான் இதுவரை மேற்கு வங்க மாநிலத்திற்கு வரவில்லை எனவும் வந்தவுடன் நகைகளை பெற்று தருவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அசிஸ் ரகுமான் சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்று பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு தப்பி செல்ல முயன்ற போது சோதனையில் திருடி சென்ற நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அசிஸ் ரகுமானை சுங்க இலகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து சுலாதேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வடபழனி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.